Friday 22 December 2017

உடை எம் தவறு

சேலை அணிந்தால்,
காற்றில் பறந்த மாராப்பினால்இடை தெரிந்து தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!
.
பேன்ட் சட்டை அணிந்தால்,
உடலோடு ஒட்டிய ஆடை தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!
.
பாவாடை சட்டை அணிந்தால்,
கென்டைக்கால் தெரிந்தது தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!
.
முழுதாய் முக்காடிட்டால்,
கை விரலும் ,கால் விரலும் தெரிந்து தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாய்..!
.
பழங்காலம் போல் அடுப்படியிலேயே, பெண்ணை விட்டு வைத்தாலும்,
"பெண் என்பவளையே நான் பார்த்ததே இல்லை", அது தான்
என் உணர்ச்சியை தூண்டியது என்பாயோ ..?
.
உணர்வு தூண்டல்
உடை எம் தவறு எனில்
மன்னிப்பு கோருவேன்..!
.
வணங்கும் உடை ஒன்று சொல்...?
நான் தரிக்கிறேன்..!
அதை மீறி என்னை தப்பாக அர்த்தம் கொண்டால்,
என் தோல் உரிக்கிறேன் ..!
.
உணர்வுகளின் தூண்டல்
மனித இயல்பு
மறுக்கவில்லை நான் ..!
.
மனசு ஒன்று எனக்கும் உண்டு..!
மறுப்பாயா நீ..?
.
நான்
என் செய்தால்,
உன்னை ஈன்றவளுக்கு ஈடாய்
என்னை பார்ப்பாய் ஆண் மகனே..?

Thursday 21 December 2017

படித்ததில் பிடித்தது ...!

ஏ கடலே
அள்ள அள்ள
அளவில்லாமல்
கொடுத்தவளே-என்ன ஆனதடி உனக்கு ?

நேற்றுவரை தாலாட்டு பாடிய நீ -இன்று
ஏனடி முகாரியை
முர்க்கத்தனமாய்
பாடுகிறாய்?
அலைகளால் மணலை வாரி எங்கள் மீது
மூடுகிறாய்

உன்னைத் தாய்
என்று தானடி
சொன்னோம்-ஏனடி
பேயானாய்! பிஞ்சு
உயிர்களைத் தின்ற
பிசாசு ஆனாய்?உந்தன் உப்பை
தின்றதற்காகவா
எங்கள் ஊன் தின்றாய்
உயிர் தினறாய்
உடமைகள் தின்றாய்

பூமியின் மூன்று
பகுதிகளை முழுவதுமாக தின்றுமா உன் பசி
அடங்கவில்லை!

உன்னிடம் இருக்கும் உப்பு போதாதா?
எங்கள் கண்ணீரும்
சேர்ந்தா கரிக்க
வேண்டும்

எங்கள் உதிரம் குடித்தா-உன் உயரம்
வளர வேண்டும் தினம் தினம் சூரியனை விழுங்கிய சூடு தனிக்கவா
எங்கள் கிராமங்களின்
குருதி குடித்தாய்? இன்று...
உன்னுள் இருப்பது
தண்ணீர் இல்லையடி
எங்கள் கண்ணீர்

உன்னுடன்
காதல் கொண்டோம்
கவிதை கொண்டோம்
அதனாலா கண்ணீர்
கொள்கிறோம்

உன்னில்...
அமைதி வேண்டும்
அன்பு வேண்டும்
அணைப்பு வேண்டும்
ஏ கடலே...