Wednesday 6 June 2012

சொர்க்கம்

கருவிலே எனைச் சுமந்தவளை..
மூலக்கருவாக்கி நான் வடித்த முதல் கவிதை..

தாயின் காலடியிலே சொர்க்கம்..
இது பெருமானாரின் கூற்று..
தாய் காட்டும் பாசமோ..
தெளிந்த நீர் ஊற்று..

உயிர்போகும் வலியினூடே எனை ஈன்றாள்..
என்முகம் பார்த்த அந்நொடிபொழுதில் அவ்வலி மறந்தாள்..

தன்னுயிர் பிணை வைத்து
என்னுயிர் ஈன்றவளை..
என் இன்னுயிர் உள்ளவரை..
ஒருபோதும் நான் மறவேன்..

சொன்னால் தான் தெரியும் பிறருக்கு நம் தேவை..
சொல்லாமலே புரியும் அவளுக்கு நம் பார்வை..

கருவறையில் நாம் அவளை எட்டி உதைத்த போதினிலும்..
கனிவுடனே கட்டி அணைத்து முத்தமழை பொழிவாளே..

ஒரு கவள உணவாயினும்..
தான் உண்ணா.. நமக்களித்து..
அகமகிழும் அற்புத ஜீவன் அவள்..

நாம் உச்சரித்த வார்த்தைகளில்
முதல் வார்த்தை அம்மா..

அந்த அன்னையின் அருமை சொல்லி மாளா..
பெருமைகள் எண்ணிளடங்கா..
எழுத இக்கவிதை போதா..
சிந்தனைக்கு சிலவற்றை..
உதிர்க்கின்றேன் உதாரணமாய்..

அவள் உள்ளத்து வெண்மை..
வெண்மையில் தெரியும் மென்மை..
மென்மைக்கு இலக்கணமான பெண்மை..
பெண்மைக்கு பெருமை சேர்க்கும் தாய்மை..
அத்-தாய்மை ஈன்ற மகவு..
அதனால் ஏற்பட்ட உறவு..
அவ்வுறவினால் அடைந்த உவகை..

அவளின் அளப்பறிய பாசம்..
அவள் காட்டிய பரிவு..

அன்னையின் கருணை..
அவள் சொல்லில் தெரியும் கனிவு..

பாலோடு அவள் சேர்தூட்டிய வீரம்..
அவ்வீரத்தினால் நாம் செய்த தீரம்..

அவள் புகட்டிய கல்வி..
அக்கல்வியினால் நாம் பெற்ற அறிவு..
அறிவினால் வளர்ந்த திறமை..
அத்திறமையினால் விளைந்த வெற்றி..
அதைக் கண்டு அவள் அடைந்த பெருமை..
அப்போது அவள் விழியில் அரும்பிய ஈரம்..
இதற்கு உண்டோ பேரம்??

நிகரில்லா அவளின் அன்பு..
அதுவே அவளின் உயரிய பண்பு..

மொத்தத்தில்..
நமக்காகவே உருகும் அவளின் வாழ்வு..
அவளாலே நமக்கு உண்டு மீள்வு..

அன்னைக்கு நாம்பட்ட கடன் என்ன?
அவளுக்கு செய்ய வேண்டி கடமை என்ன?
எண்ணி எண்ணி பார்த்து விட்டேன்..
எண்ண எண்கள் போதவில்லை..
கணக்கிட்டு பார்த்து விட்டேன்..
கண்களிலே கண்ணீர் மழை..

நம் கடமையில் நாம் காட்டவேண்டும் உறுதி..
அதற்கு நாம் கொடுத்து உழைக்க வேண்டும் குருதி..

ஈரைந்து மாதங்கள் அவள் நமைச் சுமந்தாளே!
ஈடேற்றம் பெறுவோமே.. நாம் அவளைச் சுமந்தாலே!

தாயின் காலடியிலே சொர்க்கம்..
இதை தக்க வைத்து கொள்வோமா..தினம் தினமும்???

1 comment:

  1. உங்கள் பதிவைப் படிக்கும் பொழுது
    நூறு தாய் வந்து தாலாட்டுவது
    போன்று உள்ளது மாஷா அல்லாஹ்.

    ReplyDelete